Tuesday, June 8, 2010

உலகக்கோப்பை கால்பந்து கண்ணோட்டம்

பத்தொன்பதாவது "பிபா உலக கோப்பை" வரும் ஜூன் 11ஆம் தேதியன்று தென் ஆப்பிரிக்காவில் தொடங்குகிறது. 32 நாடுகள் பங்குபெறும் இந்த தொடரை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டு இருக்கிறது. இதில் பங்கு பெரும் முன்னணி அணிகளை பற்றி இப்போது பார்போம்.

ஸ்பெயின்:

     நடப்பு ஐரோப்பிய சாம்பியன் ஸ்பெயின் மிகவும் எதிர்பார்க்கப்படும் அணிகளில் முதல் இடத்தில் உள்ளது. இளம் வீரர்கள் நிறைந்த அணியாக இருந்தாலும் எதிர் அணிகளை நடுங்கவைக்கும் அணியாக திகழ்கிறது. பெர்னாண்டோ டோரஸ் மற்றும் டேவிட் வில்லாவின் கூட்டணி எதிர் அணிகளுக்கு எப்போதும் கிலியை கொடுக்கும் ஒன்றாக அமைந்துள்ளது. மிட்பீல்டில் ஜாவி, இனியெஸ்டா, பாப்ரேகாஸ், அலோன்சோ போன்ற சிறந்த வீரர்களை கொண்டுள்ளது. தடுப்பாட்டதிலும் சிறந்து விளங்கும் வீரர்களை உள்ளடக்கியது இன்னும் ஒரு சிறப்பாகும். கோல் கீப்பர் விசயத்தில் ஸ்பெயினிற்கு கவலையே இல்லை. உலகின் நம்பர் 1 கீப்பராக கருதப்படும் இகேர் காசில்லஸ், விக்டர் வல்டேஸ் மற்றும் பெபெ ரெய்னா ஆகிய மூன்று மிக சிறந்த வீரர்களை கொண்டுள்ளது.


     முக்கியமான தொடர்களில் பிற்பாதியில் சொதப்புவதை வாடிக்கையாகக்கொண்ட ஸ்பெயின் 2008 யுரோ போட்டியை வென்றதின் மூலம் ஒரு புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. குறை என்று பெரிதாக எதுவும் இல்லாதது ஸ்பெயினின் மிகபெரிய பலமாகும். அணியின் பெரும்பாலான வீரர்கள் ரியல் மட்ரிட் மற்றும் பார்சிலோனா அணியை சேர்தவர்களாகவே இருப்பதால் டீம் கெமிஸ்ட்ரி சிறப்பானதாக உள்ளது.

பிரேசில்:
    கால்பந்து என்றவுடன் பெரும்பாலானோர்க்கு நினைவிற்கு வரும் நாடு பிரேசில். ஐந்து முறை உலககோப்பை வென்ற நாடு! பிபா தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ள நாடு. முன்னாள் கேப்டன் கார்லோஸ் துங்கா பொறுப்பு ஏற்றதில் இருந்து தட்டு தடுமாறி விளையாடி கொண்டு இருந்த பிரேசில் கான்பெடரேஷன் கோப்பை வென்றதில் இருந்து நன்றாக விளையாடி வருகிறது. ரொனால்டோ, ரோனல்டின்ஹோ, அட்ரியானோ மற்றும் அலெக்ஸ்சாண்ரோ பேட்டோ ஆகியோருக்கு இந்த உலக கோப்பையில் துங்கா கல்தா கொடுத்துவிட்டார். இருந்தபோதிலும் காகா, பாபியானோ, ரோபின்ஹோ போன்ற அதிரடி வீரர்கள் அணியில் இருப்பது பெரும் பலம். ரியல் மட்ரிட் அணியில் விளையாடி வரும் காகாவின் ஆட்டம் சமிபத்தில் சற்று தொய்வு அடைந்து இருந்தாலும், இந்த உலக கோப்பையில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. இன்டெர் மிலான் அணிக்கு விளையாடி வரும் மைகான் மற்றும் லுசியோ ஆகியோர் தடுப்பு ஆட்டத்தில் சிறந்து விளங்குகிறார்கள். பிரேசில் ஆறாவது முறையாக உலக கோப்பை வெல்ல சிறப்பான வாய்ப்பு இருக்கின்றது.


இங்கிலாந்து:

   பாபியோ காபெல்லோ பயிற்சியாளர் ஆனதில் இருந்து மிக சிறந்த பார்மில் உள்ளது இங்கிலாந்து. ஈரோ 2008 தகுதி பெறாத அணியை இரண்டு வருடங்களில் பலம் பொருந்திய அணியாக மாற்றியது காபெல்லோவின் திறமையே ஆகும்.நடத்தை காரணமாக ஜான் டெர்ரியை அணி தலைவர் பதவியில் இருந்து நீக்கிய காபெல்லோ, ரியோ பெர்டினண்டை தலைவராக நியமித்தார். அவரும் இப்போது காயம் காரணமாக விலகி உள்ளதால் லிவெர்பூல் அணியின் தலைவர் ஸ்டீவன் ஜெராட் புதிய தலைவராக உள்ளார். நட்சத்திர வீரர் ரூனி மிக சிறந்த பார்மில் உள்ளார். ஜெராட் மற்றும் லாம்பர்ட்க்கு இது அனேகமாக கடைசி உலக கோபையாக இருக்குமாதலால் சிறப்பான முறையில் முடிக்க விரும்புவார்கள். 

  அர்ஜென்டினா:

            டியகோ மரடோனாவின் அர்ஜென்டினா அணி தடுமாறித்தான் உலக கோப்பைக்கு தகுதி பெற முடிந்தது. உலகின் தலை சிறந்த வீரர் லியோனல் மெஸ்ஸி கிளப் அளவில் சாதிப்பதை போல் அர்ஜென்டினா அணியில் எதுவும்சாதிக்கவில்லை. ஆனால் உலக கோப்பையில் நன்றாக விளையாடுவார் என்று எதிர் பார்க்கலாம். அர்ஜென்டினா அணியில் திறமைக்கு குறைச்சலே இல்லை. மெஸ்ஸி, அகுரோ, டெவேஸ், மிலிட்டோ, ஹுகையன், மச்செரனோ போன்ற சிறந்த வீரர்களை கொண்டாலும் அணியாக விளையாடும் பொழுது ஏமாற்றத்தையே கொடுக்கிறது.வால்ட்டர் சாமுவேல் , கப்ரியல் ஹெய்ன்ஸ் ஆகியோரின் அனுபவம் தடுபாட்டதில் கை கொடுக்கும். எப்போதும் போல தாக்குதல் ஆட்டத்திர்க்கு ஏற்றார் போல் அணியின் பார்மேசனை மரடோனா அமைப்பார். கோப்பையை வெல்லுமோ இல்லையோ அர்ஜெண்டினாவின் ஆட்டம் பார்பதற்கு அற்புதமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!

நெதர்லாந்து:

உலக கோப்பை தகுதி சுற்று ஆட்டங்களில் 100% வெற்றியுடன் தகுதி பெற்ற நாடு நெதர்லாந்து.  ஸ்பெயினை போலவே அதிரடி ஆட்டத்தில் சிறந்த அணி நெதர்லாந்து. முன்னணி வீரர் ரோபனின் காயம் அவரின் பங்கேற்பை கேள்விகுறியாகவே வைத்துள்ளது. டச்சு அணி முதல் சுற்றில் எளிதாக முன்னேறும் வாய்ப்பை கொண்டுள்ளது. சென்ற உலக கோப்பையிலும் ஈரோ 2008 லும் முதல் சுற்றில் அற்புதமாக விளையாடிவிட்டு இரண்டாம் சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றத்தை கொடுத்தது. இந்த முறை நல்ல முன்னேற்றம் இருக்கும் என்று எதிர் பார்க்கபடுகின்றது.
இத்தாலி:

நடப்பு சாம்பியன் இத்தாலி இம்முறை நன்றாக விளையாடுவது சந்தேகம்தான். நட்சத்திர கோல் கீப்பர் புபோன் மட்டுமே நம்பிக்கையை தருகிறார். பிர்லோ, கட்டுசோ,கன்னவோரோ போன்ற வீரர்கள் வயதாகி விட்டதால் நன்றாக விளையாடுவார்கள் என்று சொல்ல முடியாது. தாக்குதல் ஆட்டத்தில் கிலர்டினோ மட்டுமே நம்பிக்கை தருகிறார். சென்ற முறை போல இந்த முறை இத்தாலி அணி ஆச்சரியத்தை கொடுக்க வாய்ப்புக்கள் இல்லை என்றே தோன்றுகிறது.ஜெர்மனி:

முன்று முறை சாம்பியன் ஆன ஜெர்மன் அணி நல்ல பார்மில் உள்ளது. காயம் காரணமாக மைக்கல் பல்லக் அணியில் இடம்பெறாதது பெரிய இழப்பாகும். உலக கோப்பை தொடர்களில் எப்பொழுதுமே கடைசி சுற்றுகள் வரை செல்லக்கூடிய அணியாக திகழ்வது ஜெர்மனியின் சிறப்பாகும். உலக கோப்பை தகுதி சுற்றில் எளிதாக வென்ற ஜெர்மனி உலக கோப்பையிலும் நன்றாக விளையாடும் என்று எதிர்பர்கபடுகிறது.
பிரான்ஸ்:

நிச்சயமாக வெற்றி பெறாது என்று உறுதியாக கூறலாம். காரணம் பயிற்சியாளர் ரைமன் டோமன்செக். இவர் இன்னும் எப்படி அணியில் உள்ளார் என்பது அனைவருக்கும் பெரும் விந்தையே. ஈரோ 2008ல் படு தோல்வி கண்ட பிறகும் தொடர்ந்து அணியில் உள்ளார். உலக கோப்பை தகுதி சுற்றில் சொதப்பி அதன் பின்னர் இரண்டாம் வாய்ப்பான ப்ளே ஆப் ல் ஏமாற்றி உலக கோப்பைக்கு தகுதி பெற்றிருக்கிறது பிரான்ஸ். அது மட்டும் அல்லாது நட்சத்திர இளம் வீரர் சமீர் நஸ்ரியை தேர்வு செய்யாமல் விட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார். சென்ற முறை போல காப்பாற்ற இப்போது அணியில் ஜிடேன் இல்லை. ப்ரான்சின் நிலை கவலைக்குரியது தான்.3 comments:

  1. ஸ்பெயின் குறித்த அலசல் அருமை. நானும் ஸ்பெயின் தான் வெற்றி பெறும் என்று கருதுகிறேன். எனினும் இங்கிலாந்து ஆதரவாளன்

    ReplyDelete
  2. ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்திற்கு அன்புடன் வரவேற்கின்றோம்.

    erodetamizh.blogspot.com

    ReplyDelete